கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
பிரபு மற்றும் அவரது மனைவி மதுமிதா மற்றும் குழந்தைகள்
தியா ( 10 ) ரிதன் (3) மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் ( 61) ஆகியோருடன் கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார்.
கொல்கத்தாவில் உள்ள ஐந்து மாடிகளை கொண்ட தனியார் ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மாமனாருக்கு உணவு வாங்குவதற்காக பிரபு மற்றும் அவரது மனைவி மதுமிதா ஆகிய இருவரும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பிரபுவின் இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் ஆகிய மூவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள உயிரிழந்தவர்களின் உறவினர்களை கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல் மற்றும் வட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழக அரசின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இறந்தவர்கள் 3 பேரின் உடல்களையும் விமானம் மூலம் திருச்சி அல்லது கோவை கொண்டு வந்து அங்கிருந்து கரூர் கொண்டு வருவது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளிடம் பேசி வருகிறார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் மூலமாக மேற்குவங்க அரசுத்துறை அதிகாரிகளிடம் பேசி, விரைவாக உடல்களை கரூர் கொண்டுவர நடவடிக்கை எடுதது வருவதாகவும், உறவினர்களை நேரில் சந்தித்தபோது கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.