Skip to content

திக் திக் நொடிகள்-மெட்ரோவில் 9 நிமிடத்தில் வந்த நுரையீரல்-இதயம்

மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயம் குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை, மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயத்தை கொண்டு சென்று உயிர் காக்கும் பொருட்டு துரித போக்குவரத்து உதவியை வழங்கி முக்கிய பங்காற்றியது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ இரயில்வே (Carriage And Ticket) திருத்த விதிகள், 2023-ன் கீழ் இந்த சேவை வழங்கப்பட்டது.

மதுரையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளைக் கொண்டு வந்த மருத்துவ குழுவினர், சென்னை விமான நிலையத்திலிருந்து மீனாம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தனர். சென்னை மெட்ரோ இரயில் அலுவலர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக் குழுவினர் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மெட்ரோ இரயிலில் ஏறி இடைப்பட்ட எந்த மெட்ரோ இரயில் நிலையங்களிலும் நிற்காமல் ஏழு நிலையங்களை 9 நிமிடத்தில் கடந்து, ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை பாதுகாப்பாக வந்தடைந்தனர். அங்கிருந்து, மருத்துவக் குழுவினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு நுரையீரல் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற திட்டமிடப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில், திறம்பட்ட நகரப் போக்குவரத்தை மட்டுமின்றி அவசர மருத்துவ சேவைகள் மற்றும் உயிர் காக்கும் முயற்சிகளில் பங்களித்து பொதுச்சேவைக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

error: Content is protected !!