Skip to content
Home » நாளை அட்சய திருதியை…..நகை வாங்க மக்கள் ஆர்வம்

நாளை அட்சய திருதியை…..நகை வாங்க மக்கள் ஆர்வம்

அட்சய திருதியை  தினம்……  நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம், உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் பொருட்கள் குறைவின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. இதை நகைக்கடைக்காரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் நம் மக்களும் நகை வாங்க  சில தினங்களுக்கு முன்னரே நகைகடைகளில்  நகை வாங்கும் நேரத்தை  முன்பதிவு செய்து நகை வாங்குகிறார்கள்.இதனால் நகைக்கடைகளில் நாளை  கூட்டம் அலைமோதும்.

இந்த அட்சய திருதியை……சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, தினத்தை  அட்சய திருதியை என்று  அழைக்கிறோம்.

அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத அல்லது தேயாத என்று பொருள். இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர். பலர் திருமணங்களை இந்த நாளில் முடிவு செய்கின்றனர். அதுவும், திருக்கோவில்களில் வைத்து திருமணத்தை முடிவு செய்வதோ, நிச்சயதார்த்த நிகழ்வை  நடத்துவதோ மிக சிறப்பானது.  இந்த நாளில் தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களை தரும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை கடும் கோடையில் வருவதால் பலர் தங்களால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பானகம் மோர் விநியோகிக்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர். அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். கஷ்டத்தில் இருக்கும், ஏழை மக்களுக்கு அட்சய திருதியை அன்று முடிந்த தானம் செய்யுங்கள். தானம் செய்வதால், நமக்கு மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததியினருக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புதிய தொழில் தொடங்குவதற்கும், வீட்டின் கட்டுமான பணியை ஆரம்பிப்பதற்கும் மிகவும் சிறப்பான நாளாக அட்சய திருதியை நன்னாள் அமைந்துள்ளது. இந்த நன்னாள் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் அதிக அளவிற்கு பொருள் சேரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.

இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கம் வாங்க விரும்புகின்றனர்.  பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சய பாத்திரம் அளித்த தினம், அன்னபூரணி தேவி அவதரித்த தினம், விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள், பரசுராமர் அவதரித்த தினம் என இந்த நாளின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக, அட்சய திருதியை விஷ்ணு மற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு மிகவும் உகந்த மற்றும் விருப்பமான பண்டிகை நாள் என்பதால் அன்று அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நாளை (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (மே 11) மதியம் 2.50 மணிக்கு முடிவடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!