தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திருவள்ளுவர் வணிக வளாகத்தில் 47 சிறு வியாபாரிகள் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர் .
மேலும் இந்தக் கடைகளுக்கு உரிய பார்க்கிங்கையும் தனியார் ஜவுளி நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனால் வியாபாரம் சரிவர நடப்பதில்லை. வியாபாரம் இல்லாததால் பல கடைகள் பூட்டியே கிடப்பதாகவும் குற்றச்சாட்டை வணிகர்கள் தரப்பில் எழுப்பி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ராஜா சீனிவாசன், மாவட்ட செயலாளர் அப்துல்நசீர், மாவட்டத் தலைவர் முருகேசன், வணிகர் சங்க பேரவை மாநகர செயலாளர் வாசுதேவன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், வணிகர்கள் திருவள்ளுவர் வணிக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திருவள்ளுவர் வணிக வளாகத்தில் கடைகளை ஏலம் எடுத்து வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை செய்தனர். வணிகர்களின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

