கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட் முக்கியமான மார்க்கெட்டுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இங்கு சாலைகள் சரிவர இல்லாததால் வியாபாரிகளும் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைகள் அமைத்து தரப்பட்டது. ஆனால் மார்க்கெட்டின் முன்புறம் சாலைகள் மேடாகவும் மார்க்கெட்டின் பின்புறம் இறக்கமாகவும் சாலைகள் அமைத்து தரப்பட்டுள்ளது, அதே சமயம் பின்புறம் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் எம்ஜிஆர் மார்க்கெட் பின்புறம் இறக்கமாக இருந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கியது. இதனால் பல்வேறு காய்கறிகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் வியாபாரிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு சாலைகள் அமைத்து தரப்பட்டும் முறையாக இல்லாததால் கழிவு நீரும் மழை நீர் வெளியேறுவதற்கு வசதிகள் இல்லாமல் சிரமங்களை சந்தித்து வருவதாக வியாபாரிகளும் காய்கறி சுமை தூக்கும் தொழிலாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும் என்றும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.