Skip to content

புளியங்குடி அருகே சோகம்: டிராக்டர் கலப்பையில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி

புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான இவருடைய மகன் தருண்குமார் (18). இவர் புளியங்குடியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், தருண்குமார் தனது நண்பர் சூர்யா (18) என்பவருடன் பைக்கில் பெட்ரோல் நிரப்புவதற்காகப் புளியங்குடி-சங்கரன்கோவில் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார்.

பெட்ரோல் நிரப்பிவிட்டு இருவரும் பாம்புகோவில் விலக்கு பகுதியில் திரும்பிக் கொண்டிருந்தனர். சூர்யா பைக்கை ஓட்ட, தருண்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அந்தப் பகுதியில் சாலை இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், அவர்களுக்கு முன்னால் இரும்பு கலப்பையுடன் கூடிய டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. போதிய வெளிச்சம் இல்லாததால், முன்னால் சென்ற டிராக்டரை சூர்யா கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.மிக அருகில் சென்றபோது டிராக்டரைக் கண்ட சூர்யா, மோதாமல் இருக்கத் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைதடுமாறிய பைக் விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் அமர்ந்திருந்த தருண்குமார், தூக்கி வீசப்பட்டுத் டிராக்டரின் இரும்பு கலப்பை மீது விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட தருண்குமார் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டிச் சென்ற நண்பர் சூர்யா லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!