Skip to content

திருச்செங்கோடு அருகே சோகம்: பள்ளி விழாவிற்கான ஒத்திகையின் போது மாணவி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று நாட்களாக மாணவ, மாணவிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும், மாணவர்களை வரவழைத்த பள்ளி நிர்வாகம், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஒத்திகையை நடத்தியுள்ளது.

நேற்று காலை 11 மணியளவில் ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டது. மாணவியின் முகத்தில் பூச்சி கடித்ததற்கான அறிகுறி தென்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், அவரை உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி, இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் மறைவுச் செய்தி கேட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

மாணவியின் உயிரிழப்பு பூச்சி கடித்ததால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாளில் மாணவர்களை வரவழைத்து ஒத்திகை நடத்தியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!