கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பழைய விசாரணைக் குழு கலைக்கப்பட்டது. அதன்படி, திருச்சி ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக கேட் கீப்பர், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், ரயில் நிலைய மேலாளர், ஆலம்பாக்கம் ரயில் நிலைய இரண்டு மேலாளர்கள், கடலூர் ரயில் நிலைய ஒரு மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் இரண்டு பேர், ரயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
விபத்தில் நேரடியாக தொடர்புடைய கேட் கீப்பர் சிறையிலும், பள்ளி வேன் ஓட்டுநர் மருத்துவமனையிலும் உள்ளனர். ஆகவே மீதமுள்ள 11 பேரில் 5 பேர் இன்று காலையில் ஆஜராகினர்.
இவர்களிடம் தென்னக ரயில்வே தலைமையகம் சார்பில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில், மூன்று பேர் கொண்ட விசாரணை குழு விசாரணை நடத்தியது.
ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக குழுவினர் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கி தலைமைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது.
சம்பவம் நடந்தபோது கேட் கீப்பர் கேட்டை மூடாமல் இருந்ததற்கான காரணம்? முறையான தகவல் அதிகாரிகள் இடையே பரிமாறப்பட்டதா? என பல கோணங்களில் விசாரணை நடந்தது.
தொடர்ந்து 11 பேரிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.