திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் 4 மாணவர்கள், பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துத் தொடர்ந்து கஞ்சா புகைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர், தனது நண்பர்கள் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்க விரும்பி, இது குறித்து அப்பகுதி பெரியவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் கஞ்சா புகைத்த மாணவர்களுக்குத் தெரியவந்ததும், அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். “எங்களைப் பற்றிக் காட்டி கொடுக்கிறாயா?” எனக் கேட்டு, அந்த மாணவரை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியது மற்றும் புகார் கூறிய மாணவரைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது.
மோதலில் ஈடுபட்ட 4 மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது மற்றும் மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவர்களுக்குக் கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? யார் விநியோகம் செய்கிறார்கள்? என்பது குறித்தும் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாகப் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது குறித்துக் காவல் துறை மற்றும் கல்வித் துறை கவலை தெரிவித்துள்ளது பள்ளி வளாகம் மற்றும் மாணவர்கள் கூடும் இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தத் திருச்சி மாவட்டக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
மாணவர்களுக்குப் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
“தவறுகளைச் சுட்டிக்காட்டும் மாணவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கப்படும். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் திருச்சி மாவட்ட எஸ்பி எச்சரித்துள்ளார்.

