திருச்சி பீமநகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல் தலைவர் குருராஜன் என்பவருக்கு சொந்தமான காபி கடை உள்ளது. கடந்த சில நாட்களாக அவரால் கடையை சரிவர நடத்த முடியாததால் அப்பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் கவுதம் என்பவரின் மைத்துனர் புருஷோத்தமன் என்பவருக்கு காபி கடையை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல் காபி கடையில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்த காபி விலையை அவர் 12 ரூபாயாக உயர்த்தினார். இது தொடர்பாக அவர் வைத்திருந்த அறிவிப்பில் காஸ் விலை, பால் விலை, காபித்தூள் விலை உயர்ந்து விட்டதால் காபி விலை 2 உயர்த்தப்படுகிறது என கூறியிருந்தார்.
நேற்று காலை காபி கடைக்கு வந்த திருச்சி கருமண்டபம் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சர்ச்சில் என்பவர் இந்த பதாகையை பார்த்துவிட்டு பால் விலை உயர்த்தப்படவில்லை. நீங்கள் பால் விலை உயர்வு என அறிவிப்பு வைத்து தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தப்பார்க்கிறீர்கள் என கூறி கடையில் பணி செய்து கொண்டிருந்த பெண்களிடம் பதாகையை அகற்றுமாறு கூறினாராம்.
இதனையடுத்து கடை ஊழியர்கள் உரிமையாளர் புருஷோத்தமனுக்கு தகவல் தெரிவிக்கவே அவர் அங்கு வந்தார்.அப்போது இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சர்ச்சிலை புருஷோத்தமன் ஆட்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சர்ச்சில் மற்றும் திமுகவினர் நீதிமன்ற காவல்நிலையத்தில் புருஷோத்தமன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தனர்.
புருசோத்தமன் தரப்பினர் சர்ச்சில் மீது புகார் அளித்தனர். நீதிமன்ற போலீஸ் புகாரை பெற்றுக்கொண்டு புருஷோத்தமன் உள்ளிட்ட மூவர் மீது அமர்வு நீதிமன்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் புருஷோத்தமன் கைது செய்யப்பட்டார் .மேலும் வெங்கடேஸ்வரன் மற்றும் பாஜக மண்டல தலைவர் குருராஜனின் மனைவி தனுஸ்ரீ ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.