மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை
திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, கோட்டை, நகை கடைக்கார குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நியாஸ் (53). இவர் வீட்டின் அருகே கறிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார். இதனால் நியாஸ் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வெகு நேரமாகியும் வீட்டை விட்டு நியாஸ் வெளியே வராதது தெரியவந்தது. இதையடுத்து அவரது மகன் உஸ்மான் உள்ளே சென்று பார்த்தபோது நியாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலரில் புகையிலை பொருள்கள் கடத்தல் – 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை போலீசார் சங்கிலியாண்டபுரம் மயானம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் இனாம்குளத்தூர் ரஹ்மத் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (45), லால்குடி தாளக்குடி பகுதியைச் சேர்ந்த சபீர் (35) என்பதும், அவர்கள் இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 24 ஆயிரம் மதிப்புள்ள 10.5 கிலோ புகையிலை பொருட்கள், மற்றும் அதை கடத்தி வர பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்போர்ட்…பெண் உள்பட 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பாயி ( 57 ) இவர் ஸ்ரீலங்காவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கருப்பாயி போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பெயர், பிறந்த ஊர் ,பெற்றோர் பெயர் ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது .இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து கருப்பாயியை கைது செய்தனர்..
இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த ஆறுமுகம் ( 45 ), மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பிறந்த தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்தனர்.

