திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள “பாவை” என்ற தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்றை யதினம் திறந்து வைத்து, குழந்தைகள் மத்தியில் உரையாடிய போது திரைப்படங்கள் பற்றியும் பேசினார். அப்போது தியேட்டரில் சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற குழந்தைகளின் ஆசையை
நிறைவேற்றித் தருவதாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உறுதியளித்ததன் பேரில் இன்றைய தினம், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் காப்பாளர்கள் என 60 பேரை தனது சொந்த செலவில் திரைப்படம் பார்ப்பதற்காக அழைத்து வந்தார்.
முதன் முறையாக தியேட்டரில் படம் பார்க்கபோகும் உற்சாக மிகுதியில், முகமலர்ச்சியுடன் பிஞ்சு குழந்தைகள் வருகை புரிந்திருந்தனர்.
அவர்களுக்கு விழாவில் கேட்டதின்படி பொம்மைகள் விளையாட்டுப்பொருட்கள், விளையாட்டு உபகரணங்களை வாங்கி வந்து அவர்களுக்கு வழங்கி மேலும் உற்சாகப்படுத்தி, அவர்களின் புன்னகையில் மெய்மறந்து சிரித்து மகிழ்ந்தார் டிஐஜி வருண்குமார்.
தொடர்ந்து குழந்தைகளின் தோளில் கைபோட்டு அவர்களை அழைத்துச் சென்றதுடன், தங்களது ஆசையை நிவர்த்தி செய்த டிஐஜி யின் கரங்களைப் பிடித்து நன்றி கூறியவாறு இருக்கையில் அமர்ந்த சிறுவர்களுடன் தானும் அமர்ந்து திரைப்படத்தை ரசித்து மகிழ்ந்தார் டிஐஜி வருண்குமார்…
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் என்றும் இருக்குது… என்பது போல மற்றவர்களை மகிழ வைத்து தானும் மகிழ்ந்த டிஐஜி வருண்குமாரின் இந்த நல்லெண்ணத்திற்கு நாமும் ஒரு ராயல் சல்யூட் அடிப்போம்…


