தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு பலரை அனுப்பி வருவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்துதிருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் தங்கி இருப்பதாக கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் தனிப்படை போலீசாருடன் சம்பவ இடம் விரைந்து சென்றார். பின்னர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர் அப்போது அவர் இலங்கை யாழ்ப்பாணம் புன்னாலை கட்டுவான் சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த சாதுசன் ( 24) என்பது தெரியவந்தது. இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இலங்கை பாஸ்போர்ட் மூலமாக தமிழகம் வந்தார். பின்னர் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
போலி ஆதார் கார்டு மூலமாக இந்த பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார். இந்த பாஸ்போர்ட் பெங்களூரில் இருக்கும் சேவியர் என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சாதுசன் மற்றும் அவருக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவி செய்த சென்னை சதானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோயல் புகழேந்தி (54) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து இலங்கை பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். இந்த போலி பாஸ்போர்ட் பெறுவதற்கு ராஜன் சிவரஞ்சன் ஸ்டான்லி கிறிஸ்துபர் ஆகிய மேலும் மூன்று பேர் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இலங்கையைச் சேர்ந்த சுகந்தினி, நாதுசன், சதுஷ் ஆகிய மூன்று பேருக்கு இந்த கும்பல் போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிவரங்கன், ஸ்டான்லி, கிறிஸ்டோபர், ராஜன், சுகந்தினி, நதுசன், சதீஷ் மற்றும் சாமி என்கிற வைத்தியநாதன் ஆகியோரை பிடித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.