போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி ஊட்டத்துார் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது27). இவர் நேற்று திருச்சி உய்யகொண்டான் திருமலை கணபதி நகர் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசல் அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த அரசு மருத்துவமனை போலீசார், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், அவரை பிடித்து சோதனை செய்தனர். அதில், 100 கிராம் அளவு கொண்ட 9 பாக்கெட் போதை மாத்திரைகள் மற்றும் 3 சிரின்ஜ் ஆகியவற்றை மோகன்ராஜ் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
புகையிலை பொருட்கள் பதுக்கியவர்
கைது
திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
பொருட்களை சிலர் விற்று வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார், அம்பேத்கர் நகர் பொது கழிப்பிடத்துக்கு அருகிலுள்ள குறிப்பிட்ட ஒரு பெட்டிக்கடையில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 910 கிராம் புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த திருவரங்கம் அம்பேத் நகரை சேர்ந்த வினோத் (வயது31) என்ற வாலிபரை கைது செய்தனர்.