பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய- மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அளவில் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
தமிழகத்தில் திமுக தொழிற்சங்கமான தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதவிர ஜாக்டோ – ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநில மையம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த போராட்டத்தில் இணைகின்றன. இதனால் அரசு சேவைகள், வங்கி சேவைகள், பொது போக்குவரத்து சேவைகளில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டது. எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுதர்தத்தில் பங்கேற்ற நிலையிலும், மாற்று ஊழியர்களை வைத்து போக்குவரத்து தடையின்றி நடைபெற்று வருகிறது. போக்குவரத்து கழக டெப்போக்கள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் இன்று ஊழியர்கள் வருகை குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படாது என்று தலைமைச்செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார்.