தமிழக அரசின் முக்கிய துறைகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறையும் ஒன்று. இந்த துறை மூலம் அரசுக்கு வருமானம் மிகவும் குறைவு தான். செலவு மிக அதிகம். ஆனால் அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று, அரசையும், மக்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இருப்பது இந்த துறை தான். முழுக்க முழுக்க இது ஒரு சேவைத்துறையாக செயல்படுகிறது.
இந்த துறையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள், ,உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என பல அதிகாரிகள் உள்ளனர்.
துறைகள் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டாலும், அதில் உள்ள அதிகாரிகள் எப்படி இருக்கிறார்களோ, அப்படித் தான் அந்த துறை செயல்படும்.
மாவட்டந்தோறும் செய்தி மக்கள் தொடர்புத்துறை செயல்படுகிறது. மாவட்ட அதிகாரிகள் இங்கு இருக்கிறார்கள். குறிப்பாக திருச்சியில் உதவி இயக்குனர் அந்தஸ்துக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை தகுதி உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த துறையில் இருந்து எந்த ஒரு செய்தியும், பத்திரிகைகளுக்கோ, ஊடகத்திற்கோ அனுப்பப்படுவதில்லை. அதிகபட்சமாக பத்திரிகைகளுக்கு புகைப்படங்களை மட்டும் அதற்கான குறிப்புகளுடன் அனுப்புகிறார்கள். மற்றபடி அந்த புகைப்பட குறிப்பில் விவரங்கள் இருக்காது. படம் பார்த்து கதை சொல் என்ற அடிப்படையில் பட விளக்கம் மட்டுமே இருக்கும். இந்த துறையில் செய்தி வெளியீட்டு பிரிவு என்ற ஒரு பிரிவு இருக்க வேண்டும். அந்த பிரிவு இருக்கிறதா என்பது தெரியவில்லை.
குறிப்பாக அமைச்சர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால், அந்த நிகழ்ச்சியை பற்றிய எந்த விரிவான செய்திகளும் செய்தி மக்கள் தொடர்புத்துறையால் பத்திரிகைகளுக்கு வழங்கப்படுவதில்லை. செய்தி வழங்குவதால் தான், அந்த துறைக்கு பெயர் செய்தி மக்கள் தொடர்புத்துறை. ஆனால் திருச்சியில் உள்ள அலுவலகம் இப்போது போட்டா தொடர்புத்துறையாக மாறி விட்டது .
உதாரணத்திற்கு ஒன்றை சொல்ல வேண்டும் என்றால், திருச்சி சூரியூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிரந்தர மைதானத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று பார்வையிட்டார். அவருடன் கலெக்டர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான புகைப்படத்தை மட்டும் அதற்கான புகைப்பட விளக்கத்துடன் அனுப்பி உள்ளனர். இதுபோல அமைச்சர் மகேஸ் இன்று திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கும் புகைப்பட விளக்கம் மட்டுமே கொடுத்து உள்ளனர். அந்த புகைப்பட விளக்கத்திலும் எழுத்துப்பிழை இருக்கிறது.
பயனாளிகள் – என்பதற்கு பதில் பயணாளிகள் என இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தவறாமல் கேள்வி கேட்கப்படுகிறது. முதலில் இந்த போட்டோ தொடர்புத்துறை அதிகாரிகளுக்கு அரசின் திட்டங்களை விளக்க வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் துறையின் பணிகள் என்ன என்பதையாவது விளக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.