ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு 1ம் தேதி நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக அனைத்து கனரக வாகனங்களுக்கான சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் துவாக்குடி சுங்கவரி வசூல் செய்யும் மையத்தில் திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாத கட்டணமாக ரூ.8400 வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த சுங்கசாவடியை கடந்து செல்லலாம். ஆனால் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ.10190 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 50 நடை மட்டுமே செல்ல முடியும் என்று கூறி உள்ளனர்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர்கள் கூறுகையில், 50 நடை என்பது ஒரு வாரத்திற்குள்ளே முடிந்துவிடும். மீதம் இருக்கும் வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் இந்த ரூ.10190 செலுத்த வேண்டும். மாதத்திற்கு சுமார் 50ஆயிரம் வரை சுங்ககட்டணம் மட்டும் கட்ட வேண்டியுள்ளது.
இது 4 மடங்கு அதிகம் உள்ளது. எனவே இந்த வாடகையை தனியார் பேருந்துகள் செலுத்த முன்வரவில்லை ஏற்கனவே இருந்த கட்டணத்தை தான் செலுத்துவோம் என்றும், பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. எனவே உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை செலுத்த முடியாது எனக்கூறி பேருந்துகள் சுங்கசாவடியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் திருச்சி- தஞ்சை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ஏஎஸ்பி. அரவிந்த், பஸ் டிரைவர்கள், டோல்கேட் ஊழியர்கள் சிலரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றார். அந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில்டோல் பிளாசாவில் பஸ்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தனியார் பஸ் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.