திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உப்பாற்றில் 15 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 850 மீட்டர் தூர் வாரும் பணியை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த காட்டாறானது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரம்பட்டி, இலெட்சுமணன்பட்டி பகுதிகளில் உள்ள ஏரிகளில் உற்பத்தியாகி வரும் உபரிநீரானது திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், சூரியூர்
கிராமத்தில் உள்ள புதுக்குளத்தில் விழுந்து, பின்னர் காட்டாறாக உருவெடுத்து சூரியூர், கும்பக்குடி. நவல்பட்டு மற்றும் சோழமாதேவி கிராமங்களின் வழியாக
12 கி.மீ. தூரம் பயணித்து இறுதியாக கீழக்குறிச்சி அருகே உய்யக்கொண்டான் கால்வாயுடன் கலக்கிறது.
கால்வாயில் அமைந்துள்ள நாட்ராயன் கலிங்கியின் வழியாக மீண்டும் வெளியேறி கவுரு வாய்க்கால் என அழைக்கப்பட்டு இறுதியாக வேங்கூர் அருகே காவிரியில் கலக்கிறது.
இக்காட்டாற்றின் குறுக்கே நற்கடல்குடி அணைக்கட்டு மூலம் 44.07 ஹெக்டேர் பாசன நிலமும், கும்பக்குடி அணைக்கட்டு மூலம் 70.095 ஹெக்டேர் பாசன நிலமும், கும்பக்குடி தடுப்பணையின் கீழ் 38.45 ஹெக்டேர் நிலம்
என மொத்தம் 152.62 ஹெக்டேர் பரப்பளவு உள்ள பாசன நிலங்கள் பாசன வசதியை பெறுவதுடன், அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
மேலும் இந்த விழாவில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார் செயற்பொறியாளர் நித்தியானந்தம்
திருவெறும்பூர் ஒன்றிய துணைச் செயலாளர் சாந்தகுமார், ஜெகதீசன், கயல்விழி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.