திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்தலமாக விளங்கும் உத்தமர்கோவில் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் பிரம்மா, விஸ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியர்களுடன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அருள்பாலிக்கும் புருஷோத்தம பெருமாளுக்கு ஆதியில் சத்கீர்த்திவர்த்தனன் என்ற சோழ அரசால் ஏற்படுத்தப்பட்ட சித்திரை தேர் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு மூலவர் புருஷோத்தம
பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கொடி மரத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடியை வேத விற்பன்னர்கள் மங்கள இசை முழங்க கொடிமரத்தில் ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு அனுதினமும் புருஷோத்தம பெருமாள் சூரிய பிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு கண்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் வருகின்ற 10ம் தேதி காலை 10.31 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் புனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
