திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டார். இவரது தந்தை கூலி தொழிலாளி செல்வராஜ் திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த புனிதா ரோசி என்ற வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்டை அணுகினார். கோபிநாத்தை போலந்து நாட்டிற்கு இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் வேலைக்கு அனுப்புவதாக கூறி மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை ரோசி பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
செல்வராஜின் மனைவி செல்வியின் தம்பி சரவணக்குமார் தனது நிலத்தை விற்கு வெளிநாடுசெல்ல பணம் ஏற்பாடுசெய்து கொடுத்திருந்தார். பணம் கொடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பாமலும் அதேநேரம் பணத்தையும் திருப்பிதராமலும் புனிதா ரோசி ஏமாற்றி வந்துள்ளார்.
பணத்தைக் கேட்ட கோபிநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல்விடுத்த நிலையில், கோபிநாத் மற்றும் அவரது தந்தை செல்வராஜ் இருவரும் தொட்டியம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையும், இதுவரை பணத்தை மீட்டுத்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருபுறம் கடன் கட்டமுடியாமல் விவசாயக் கூலிதொழிலாளி குடும்பத்தினர் இன்னலுக்கு ஆளாக மறுபுறம் பணத்தை ஏமாந்தநிலையில் செய்வதறியாது இருந்த கோபிநாத், அவரது தந்தை செல்வராஜ், தாயார் செல்வி, மாமா சரவணகுமார் ஆகியோர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்
ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் மீது தண்ணீரை ஊற்றி புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுக்கு வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என்றும் இனிமேலும் காவல்துறை மோசடி பெண் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தராவிட்டால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வோம் என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.