Skip to content

ஜனநாயகன் பட ரிலீஸில் சிக்கல்: தணிக்கை வழக்கில் ஜனவரி 9-ல் தீர்ப்பு

நடிகர் விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரித் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினம் (ஜனவரி 9) தீர்ப்பளிக்க உள்ளது.

சுமார் ரூ.500 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு முதலில் ‘யு/ஏ’ சான்று வழங்கத் தணிக்கை வாரியம் முடிவு செய்திருந்தது. ஆனால், திடீரென சில காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புகார் வந்திருப்பதாகவும், அதனால் படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தணிக்கை வாரியம் தெரிவித்தது. இதை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், படம் வெளியாக உள்ள நிலையில் தணிக்கைச் சான்றிதழ் வழங்க வாரியம் இழுத்தடிப்பதாக வாதிடப்பட்டது.

மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இலச்சினைகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாகப் புகார் வந்ததாலேயே மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகத் தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, வழக்கின் தீர்ப்பை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். படம் வெளியாகும் தேதியிலேயே தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், ‘ஜனநாயகன்’ திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

error: Content is protected !!