ரஷ்யா, உக்ரைன் போரை தொடர்ந்து பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதில்லை. அதே நேரத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இது அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பிடிக்கவில்லை. அவர் ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்த பலமுறை முயன்றும் அது நடக்கவில்லை என்பதால், டிரம்பின் கோபம் இப்போது இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.
அதன் வெளிப்பாடு தான், ஜூலை 30 அன்று, இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார் டிரம்ப். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று கூறிய டிரம்ப் பின்னர் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தள்ளிவைத்து இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீபன் மில்லர், “இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் உடனான போருக்கு இந்தியா தொடர்ந்து நிதியுதவி செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று டிரம்ப் மிகத் தெளிவாகக் கூறுகிறார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் இந்தியா அடிப்படையில் சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறது என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள்.” என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்ததால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்திவிட்டதாக பரவலாக கூறப்பட்டாலும், இது குறித்து இந்தியா எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்திய அரசாங்க வட்டாரங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி தொடரும் என்று தெரிவித்தன.