Skip to content

நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது உலக பாதுகாப்புக்கு அவசியம் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவுக்கு முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என்ற அவரது முந்தைய கருத்துகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

ட்ரம்ப் தனது அறிக்கையில், இந்த நடவடிக்கை ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து கிரீன்லாந்தை பாதுகாக்கும் என்றும், டென்மார்க்குக்கு அதற்கான திறன் இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.ட்ரம்ப், NATO கூட்டணிக்கு அமெரிக்கா இதுவரை அதிக உதவிகள் செய்துள்ளதாகவும், இப்போது NATO அமெரிக்காவுக்காக ஏதாவது செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

“NATO அமைப்பு உருவானதிலிருந்து அதற்காக அதிக உதவிகள் செய்தது அமெரிக்காதான்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கிரீன்லாந்துக்கு உரிமை இருப்பதை நிரூபிக்கும் எழுத்துப்பூர்வ ஆவணங்கள் டென்மார்க்கிடம் இல்லை என்றும், அமெரிக்காவின் நலனுக்கு தேவையானதைச் செய்வதிலேயே தனது கவனம் இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், “இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இல்லை” என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் சர்வதேச அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ட்ரம்பின் இந்த அறிக்கை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஆக்ரோஷமான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.நார்வே பிரதமருக்கு ட்ரம்ப் எழுதிய கடிதம் இந்தச் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

“சுமார் 8 போர்களைத் தடுத்து நிறுத்தியும், உங்கள் நாடு (நார்வே) எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க மறுத்துவிட்டது” என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் கடிதம் நோபல் பரிசு அமைப்பின் நடுநிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.ட்ரம்பின் இந்தக் கருத்துகள் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் இதனை கடுமையாகக் கண்டித்துள்ளன. கிரீன்லாந்தின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தச் சம்பவம் அமெரிக்கா-ஐரோப்பா உறவுகளில் புதிய பிளவை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. NATO கூட்டணியின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. ட்ரம்பின் இரண்டாவது ஆட்சி உலக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!