Skip to content

தூத்துக்குடி துப்பாக்கிசூடு 7ம் ஆண்டு நினைவு தினம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது  போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்  13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு விட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சல் செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பெ.கீதாஜீவன் கலந்து கொண்டு, துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர், தோமையார் கோயில் தெரு, பூபாலராயர்புரம், லயன்ஸ்டவுன் உள்ளிட்ட இடங்களிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் சமாதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனால் தூத்துக்குடி நகரமே இன்று ஒருவித சோகத்துடன் காட்சி அளித்தது.  துப்பாக்கிசூடு நினைவுதினத்தையொட்டி தூத்துக்குடியில் இன்று  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

 

 

 

 

error: Content is protected !!