நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு நேற்று மாலை மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாரபத்தி கிராமத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி தொண்டர்கள் 20ம் தேதி நள்ளிரவே மாநாட்டு திடலுக்கு வந்தனர். முன்னதாக வந்தால் தான் விஜயை நன்றாக பார்க்க முடியும் என்பதற்காக வந்து உள்ளோம் என்று தொண்டர்கள் தெரிவித்தனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு த.வெ.க உணவு வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் ஐந்து லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. அதேபோல் மாநாட்டை சுற்றியும் பல்வேறு தற்காலிக உணவு , ஸ்நாக்ஸ் கடைகள் அமைக்கப்பட்டது.திறந்த வெளியில் மாநாடு நடந்ததால் தொண்டர்கள் வெயிலில் மயக்கம் போட்டு விழுந்தனர். மாநாட்டு திடலிலேயே குடிநீர் பைப் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
இத்தனை செலவு செய்த விஜய், ஏன் தொண்டர்கள் அமரும் இடத்தில் பந்தல்போடவில்லை என சில நிர்வாகிகள் கேட்டபோது, பந்தல் போட்டால் கூட்டம் பெரிதாக காட்ட முடியாது. அதனால் தான் திறந்த வெளியில் தொண்டர்களை வைத்து ஏரியல் ஷாட்டில் காட்டி மாநாட்டை பிரமாண்டபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாநாட்டுக்காக 500 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார் செய்யப்பட்டது. இதில் மாநாட்டு திடல் மட்டும் சுமார் 200 ஏக்கர் இருக்கும் என்று கூறப்படுகிறது. மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சம் நாற்காலிகள் போடப்பட்டது. 15 நாட்களாக அந்த மைதானத்தை தயார் செய்து மேடை போட்டு, கொடி கட்டி ஏற்பாடு செய்யப்பட்டாலும் மாநாட்டில் விஜய் மட்டும் தான் பேசினார். மற்ற நிர்வாகிகள் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளவும், தங்கள் கட்சியிலும் ஜனநாயகம் இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளவும் மற்ற நிர்வாகிகள் ஒப்புக்கு பேசினர். கிட்டதட்ட இரண்டரை மணி நேரம் தான் மாநாடு நடந்தது.
வழக்கமாக மாநாடு முடிந்த திடல்களை மறுநாள் பார்த்தால் ஆள் அரவம் இன்றி, பந்தலை பிரிக்கும் தொழிலாளர்கள் மட்டுமே காணப்படுவார்கள். ஆனால் விஜய் மாநாடு நடந்து முடிந்த மதுரை பாரபத்தியில் கலவர பூமியை பார்த்தது போன்ற நிலைமை தான் காணப்பட்டது. சுமார் 5 ஆயிரம் நாற்காலிகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டு கிடந்தது. இது தவிர தடுப்பு பேரிகாடுகள் சாய்க்கப்பட்டு கிடந்தது. தண்ணீர் குழாய்கள் பெரும்பாலும் உடைந்தே கிடந்தது. மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலணிகள் அறுந்தும், பிய்ந்தும் சிதறி கிடந்த காட்சியை பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டிலும் ஆயிரகணக்கான நாற்கலிகள் உடைக்கப்பட்டன. இப்போதும் பல ஆயிரம் நாற்கலிகள் உடைக்கப்பட்டன. இந்த நிலையில் விஜய் மாநாட்டுக்கு எப்படி நாற்காலிகள் சப்ளை செய்ய முடியும் என நாற்காலி கான்ட்ராக்டர் கண்ணீர் மல்க கூறினார். இன்று காலையில் மாநாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அங்கு கிடக்கும் குப்பைகள், உடைசல்களை அகற்ற குறைந்தது 2 நாட்கள் பிடிக்கும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். மாநாட்டுக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பளத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள். அவர்களுக்கு சரியான முறையில் உணவு வழங்காததால் ஆத்திரத்தில் இப்படி உடைத்ததாக சிலர் கூறினர்.
வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உற்சாக பானம் மிகுதியாக அருந்தியதால் இப்படி ஆகி விட்டது என்றும் சிலர் தெரிவித்தனர். எப்படியோ விஜய் மாநாடு நடத்தினால் நாற்காலி உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்பது மட்டும் உறுதி. மாநாட்டில் பேசிய விஜய் தன்னை சிங்கம் என்றார். குட்டி சிங்கங்கள் செய்த வேலையை பார்த்தால் அசிங்கமாக இல்லையா?

