2026 சுதந்திர தினத்தில் முதல்வர் ஸ்டாலின் கோட்டையிலும் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம் பாளையத்திலும் தேசியக்கொடி ஏற்றுவது உறுதி என திமுக நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் திண்டுக்கல் லியோனி உரையாற்றினார்.
சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் திமுகவின் நான்காண்டு சாதனை பொதுக்கூட்டம் ஒன்றய செயலாளர் அயப்பாக்கம் துரை வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி உள்ளிட்டவர் கலந்து கொண்டு திமுக ஆட்சியில் நான்காண்டு சாதனைகளை பட்டியலிட்டனர். நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் லியோனி, தவெக கோவை பூத் கமிட்டி கூட்டத்தை மற்றும் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த கடுமையாக கிண்டலடித்து விமர்சனம் செய்தார்.
TVK என்பது தனக்கு டீ விற்க என்றுதான் கேட்பதாகவும், 2026 தேர்தலில் அவர்கள் டீ விற்க தான் செல்வார்கள் எனவும் தவெக கட்சியை விமர்சித்தார். ஓடி வந்து திடீரென முதல்வர் நாற்காலியில் உட்கார ஆசைபடுவதா? சாதாரண சைக்கிள் ஓட்ட கூட கடுமையான பயிற்சி வேண்டும், சைக்கிள் சீட்டில் உட்காரவே படிப்படியாக கஷ்டப்பட்டு ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கட்சிக்கு தலைவராகி ஒரே ஆண்டில் முதல்வர் ஆகலாம் என கனவில் கூட என்ன வேண்டாம் என விஜயை திண்டுக்கல் லியோனி நேரடியாக சாடினார். அன்று குடியுரிமை திருத்தம் சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு துரோகம் செய்துள்ளார் எனக் கூறிய லியோனி, 2026 இல் ஏழாவது முறை திமுக மீண்டும் ஆட்சி அமைத்து கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொடியேற்றுவார், எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் வீட்டு வாசலில் தேசிய கொடி ஏற்றி மிட்டாய் வழங்குவார் என்றார்.
