நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பரமத்திவேலூர் அடுத்துள்ள மறவாபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரவீன் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர், வெட்டுக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் கார்த்தி (19). இவர் பைக் மெக்கானிக்காகப் பணியாற்றி வந்தார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தேர் திருவிழாவிற்குச் சென்றுள்ளனர்.
நள்ளிரவு வரை திருவிழாவில் இருந்த இருவரும், இன்று அதிகாலை 2 மணி அளவில் கபிலர்மலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். கார்த்தி பைக்கை ஓட்டி வந்த நிலையில், கபிலர்மலை – பரமத்தி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற பைக் அங்கிருந்த பள்ளியின் சுற்றுச்சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரவீன் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பரமத்தி போலீசார், இருவரின் சடலங்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் திருவிழாவிற்குச் சென்று திரும்பியபோது விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

