Skip to content

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியதுடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் மிக முக்கிய நிகழ்வான 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட உள்ளது.

பொதுவாகப் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில், விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் இயங்காது. மேலும் அன்று ‘குரு ரவிதாஸ் ஜெயந்தி’யும் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், அனைத்துக் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திட்டமிட்டபடி நாளை காலை 11 மணிக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, 1999-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அப்போதைய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு சுமார் 27 ஆண்டுகள் கழித்து, ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்ற பெருமையை இது பெறுகிறது.

முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில், அண்மையில் விமான விபத்தில் காலமான மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்காக மக்களவையில் 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் பிப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!