Skip to content

யாரும் அறியாத ‘லட்சாதிபதி’: விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து ரூ.4.52 லட்சம் மீட்பு

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனில்கிஷோர் என்பவர் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அனில்கிஷோர், தான் வழக்கமாகத் தங்கும் இடத்திற்கே சென்று படுத்துக்கொண்டார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக முறையான சிகிச்சை இன்றி அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அனில்கிஷோர் தங்கியிருந்த இடத்தில் இருந்த அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்தபோது, அங்கிருந்த பைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பைகளில் மொத்தம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 207 ரூபாய் ரொக்கம், 12 சவுதி ரியால் நோட்டுகள் மற்றும் செல்லாத பழைய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தபோது கொடுத்த முகவரியை வைத்து உறவினர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், அவரது குடும்பத்தினர் எவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொத்தப் பணத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!