Skip to content
Home » 14 மீட்டர் துளையிடும் பணி தீவிரம்.. தொழிலாளர்களின் மன அழுதத்தை குறைக்க செஸ், ரம்மி..

14 மீட்டர் துளையிடும் பணி தீவிரம்.. தொழிலாளர்களின் மன அழுதத்தை குறைக்க செஸ், ரம்மி..

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை சுரங்கத்தில் மண் சரிவுஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கப் பாதையை மூடியிருக்கிறது. உட்பகுதியில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு மண் சரிவு இல்லை. அந்த பகுதியில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மத்திய, மாநில அரசுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட சுமார் 19 அமைப்புகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதலில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்ற முயற்சிமேற்கொள்ளப்பட்டது. ஆனால் மேற்பகுதியில் இருந்து தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பிறகு டில்லி, குஜராத், ஒடிசா, உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பல்வேறு இயந்திரங்கள் பழுதான நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பு ஆகர் இயந்திரம் மணல் குவியலின் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட்டு முன்னேறியது. எனினும் இந்த இயந்திரம் அடிக்கடி பழுதாகி மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டில்லியில் இருந்து 7 நிபுணர்கள் ஹெலிகாப்டரில் வரவழைக்கப்பட்டு அமெரிக்க இயந்திரம் பழுது பார்க்கப்பட்டது. அந்த நிபுணர்கள் அங்கேயே முகாமிட்டு இயந்திரம் பழுதாகாமல் பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்க இயந்திரத்தை இயக்கும் பிரவீண் குமார் யாதவ் நேற்று கூறியதாவது: சுமார் 47 மீட்டர் தொலைவுக்கு மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களைவெற்றிகரமாக பொருத்தி உள்ளோம். கடந்த வியாழக்கிழமை இயந்திரத்தின் அதிர்வு அதிகமாக இருந்தது. இதன்காரணமாக இயந்திரம் நிறுவப்பட்டிருந்த அடிப்பகுதி நிலைதாங்கி உடைந்தது. இதை சீர் செய்வதற்காக துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை துளையிட்டபோது இரும்பு குழாய்குறுக்கிட்டது. இதில் ஆகர் இயந்திரத்தின் முனை சேதமடைந்து துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது இயந்திரத்தை பழுது பார்த்து மீண்டும் துளையிட்டு வருகிறோம். இன்னும் 14 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு குழாய்களை செலுத்தினால் தொழிலாளர்களை சென்றடைய முடியும். இவ்வாறு பிரவீண் குமார் தெரிவித்தார். துளையிடும் பணி முடிந்து இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்ட பிறகு, தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள், குழாய் வழியாக சுரங்கப் பாதைக்குள் சென்று 41 தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான செயல்விளக்கத்தை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நேற்று நிகழ்த்தி காட்டினர். அந்த படை வட்டாரங்கள் கூறியதாவது: இன்னும் 14 மீட்டர் தொலைவுக்கு இரும்பு குழாய்களை செலுத்த வேண்டி உள்ளது. தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் பகுதி வரை குழாய்கள் பொருத்தப்பட்ட பிறகுஎங்களது படையை சேர்ந்த 15 வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், காஸ் வெல்டிங் கட்டர் இயந்திரங்களுடன் குழாய் வழியாக தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கு செல்வார்கள். எங்களோடு மருத்துவர் ஒருவரும் உடன் வருவார். சுமார் இரு வாரங்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்படும். ஆரோக்கியமானநிலையில் இருக்கும் தொழிலாளர்கள் குழாய் பாதை வழியாக ஊர்ந்து வெளியேறுவார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்காக சிறப்புடிராலியை ஏற்பாடு செய்துள்ளோம்.இந்த டிராலியில் தொழிலாளர்களை படுக்க வைத்து சுரங்கத்தின் வெளியில் இருந்து கயிறுமூலம் டிராலியை இழுத்து தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள். இவ்வாறு தேசிய பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மீட்புப் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் ரோஹித் கூறியதாவது: சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க ரம்மி, லூடோ, செஸ் அட்டைகளை குழாய் வழியாக அனுப்பி உள்ளோம். இந்த விளையாட்டுகளை தொழிலாளர்கள் விளையாடி பொழுதை போக்கினால் அவர்களது மனஅழுத்தம் குறையும். அதோடு வாக்கி டாக்கி வாயிலாக உறவினர்களிடம் தொழிலாளர்கள் பேசி வருகின்றனர். மனநல மருத்துவர்களும் தொழிலாளர்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களின் மனஉறுதியை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!