அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வைத்தியலிங்கம் எம்பி. சசிகலா குடும்பத்தினரால் பரம எதிரியாக பார்க்கப்பட்ட வைத்தியலிங்கம் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியவுடன் அவருக்கு எம்பி சீட் வழங்கினார் ஜெயலலிதா. இந்நிலையில் வைத்திலிங்கத்தின் ஆலோசனையின்படி தான் தஞ்சை, மயிலாடுதுறை எம்பி வேட்பாளர்களும், தஞ்சை இடைத்தேர்தல் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு டெல்லி பாஜகவிற்கு வேண்டுகோள் விடுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஓபிஎஸ் மகனுக்கு மட்டும் மத்திய அமைச்சர் பதவி வழங்கக் கூடாது என அதிமுகவில் மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
குறிப்பாக இந்த ஆட்சிக்கான எம்எல்ஏக்களை பாதுகாத்து வைத்திருந்தவர்களில் நானும் ஒருவன். அப்போது என்னுடைய தரப்பில் 10 எம்எல்ஏக்கள் இருந்தனர். எனவே அமைச்சர் பதவி என்றால் 2 அல்லது 3 பேருக்கு வாங்கிக் கொடுங்கள். ஒரு வேளை ரவீந்திரநாத்க்குதான் என்றால் கட்சியை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை என வைத்தியலிங்கம் இபிஎஸ் தரப்பிடம் கூறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.