அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை 13-ந் தேதி தொடங்கும் விஜய், திருச்சி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்து பேசுகிறார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியை தனது இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். விக்கிரவாண்டி, மதுரை பாரபத்தி ஆகிய இடங்களில் இரண்டு மாநாடுகளை நடத்திய விஜய் அதற்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார். இது அவரது அரசியல் பிரசார சுற்றுப்பயணமாக கருதப்படுகிறது.
இந்த பிரசார சுற்றுப்பயணத்தை தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் இருந்து தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். திருச்சியில் வருகிற 13-ந் தேதி பிரசாரத்தை தொடங்கி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். விஜய் பிரசார பயணத்திற்கான ஏற்பாடுகளை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். முதல் கட்டமாக விஜய், மக்களை நேரடியாக சந்திக்க இருப்பதால் இந்த பிரசார கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவரது கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று முன்தினம் திடீரென திருச்சிக்கு வந்தார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை நேரில் சந்தித்து ‘வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் திருச்சி நகரில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலைய ரவுண்டானா, மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை ஆகிய இடங்கள் வழியாக செல்வதற்கும் (ரோடு ஷோ), சத்திரம் பஸ் நிலையத்தில் உரையாற்றுவதற்கும் அனுமதி தர வேண்டும். பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் உரிய விதிமுறைகளை பின்பற்றி முறையாக பிரசார பயணத்தை நடத்துவோம் என்று உறுதி அளிக்கிறோம்’ என கூறி ஒரு மனுவை கொடுத்தார்.
ஆனால் போலீசார் தரப்பில் இதற்கு அனுமதி வழங்க முடியாது. திருச்சி நகரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட 45 இடங்களில் ஏதாவது ஒன்றில் விஜய் பேசுவதற்கு மட்டும் அனுமதி வழங்கலாம் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து புஸ்சி ஆனந்த் உள்பட த.வெ.க. நிர்வாகிகள் திருச்சி மரக்கடை பகுதிக்கு சென்று அங்கு விஜய் பேசுவதற்கான இடத்தை பார்வையிட்டனர். அதன் பின்னர் புஸ்சி ஆனந்த் புறப்பட்டு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி தெற்கு மாவட்ட த.வெ.க. பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் திருத்தம் செய்யப்பட்ட விண்ணப்ப மனுவுடன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகள் திங்கட்கிழமை (இன்று) காலை வந்து விண்ணப்பம் கொடுக்கும்படி கூறி விட்டனர். எனவே இன்று மீண்டும் மனு கொடுக்கப்பட இருக்கிறது. திருச்சியில் விஜய் பிரசாரம் செய்வதற்கான இடம் உறுதி செய்யப்பட்டு விட்டாலும், அதற்கான அனுமதி போலீசார் இன்று அறிவிக்க உள்ளனர்.
