Skip to content

வேதனையில் விஜய்.. எந்த தலைவனுக்கும் இப்படி நடக்கக்கூடாது.. நடிகர் ரஞ்சித் வேதனை

கரூர் சம்பவம் விஜய்க்கு வாழ்நாழ் முழுவதும் ஆறாத வடுவாக இருக்கும் எனவும், இது போன்ற நிகழ்வு எந்த ஒரு தலைவனுக்கும் வரக் கூடாது எனவும் நடிகர் ரஞ்சித் தெரிவித்தார்.

தென்தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் வேல் பூஜை, திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள சூரசம்ஹார சந்தோஷ மண்டபம் பகுதியில் நடைபெற்றது. கடற்கரையில் அமைக்கப்பட்ட சுமார் 5 அடி உயர வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள், கடற்கரையில் அமர்ந்து கந்தசஷ்டி பாராயணம் பாடினர். இதில் நடிகர் ரஞ்சித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித், “கரூர் சம்பவத்தில் ஒருவரையொருவர் மாறி மாறி திட்டிக் கொள்வது தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. 41 உயிர்கள் பறி போன சம்பவம் என்பது சாதாரண விஷயம் கிடையாது, ஆறாத வலி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் ஆறுதலாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக தினம்தோறும் தூண்டிவிட்டு வருகிறோம். கரூர் சம்பவம் அரசியலாக மாறிவிட்டது என்பதால் கருத்து தெரிவிக்க முடியாது.

கரூர் சம்பவத்தால் விஜய் மிகுந்த வேதனையில் இருப்பார். 41 பேர் உயிரிழந்த பிறகு, ஒரு மனிதனால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும். வாழ்நாள் முழுவதும் இந்த துக்கம் அவரது மனதில் இருந்து நீங்காது. இது போன்ற ஒரு நிகழ்வு எந்த தலைவனுக்கும் வரக் கூடாது. பெற்றோர்களை இழந்தால் கூட, புகைப்படத்திற்கு மாலை போட்டு விட்டு மறந்து விடலாம். இந்த நிகழ்வை அவரால் மறக்கவே முடியாது, விஜயின் மனதில் கடைசி வரை ஒரு வடுவாகவே இருக்கும். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஜனவரிக்கு பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்,” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “தேசத்தை காப்பது நமது கடமை. இயற்கை நன்றாக இருக்க வேண்டும், விவசாயம் நன்றாக இருக்க வேண்டும், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மதப்பிளவு இருக்கக் கூடாது என்பதற்காக இந்த பாராயணம் நடந்தது.

ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தார்கள் என்பதைக் காட்டிலும் சீனா, ஜப்பான், கம்போடியா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டன. அதன்படி, வரும் அக்.22 ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூரில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக அறுபடை வீடுகளிலும் இந்த வேல் பூஜை நடைபெறுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பதிலளிப்பதற்கு நான் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அனைவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அரசாங்கம் தான் மிகப் பெரிய கடவுள். ஏனென்றால், அவர்கள் நம் கண் முன்னர் இருக்கும் மனித தெய்வங்கள். தமிழக அரசு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்கள். அவை அனைத்தையும் நிறைவேற்றியிருந்தால், நம் நாட்டு மக்கள் நன்றாக இருந்திருப்பார்கள்.

தமிழ்நாடு இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். அரசியல்வாதியாக இல்லை, ஒரு வாக்காளராக அந்த வேண்டுதல் எனக்கும் உள்ளது. நல்லவர்கள் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். ஒருவேளை அந்த பாக்கியம் இருந்து, மக்கள் பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் செய்வேன்” என நடிகர் ரஞ்சித் தெரிவித்தார்.

error: Content is protected !!