தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அலுவலகத்தில், தவெக தலைவர் விஜய் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இமானுவேல் சேகரனின் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான உரிமைப் போராட்டங்களையும், தியாகத்தையும் புகழ்ந்து, அவரது நினைவு நாளில் மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், ”சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி திரு.இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.