Skip to content

வின்பாஸ்ட் கார் விற்பனை, 31ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு   முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் இம்மாத இறுதியில் இருந்து விற்பனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பேட்டரி உற்பத்தியையும் துவங்கி இந்தியா முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் அமைத்து உள்நாட்டு சந்தையை பிடிக்கவும் வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பேட்டரி கார்கள் இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது பேட்டரி கார்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இரு சீன கார்களுக்கு இந்த வின்பாஸ்ட் நிறுவனம் போட்டியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில், வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் விஎப் 6, விஎப் 7 வகை மின்சார கார்களுக்கான முன்பதிவு துவங்கிய நிலையில் கணிசமான கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வின்பாஸ்ட் ஆன்லைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குள்ள பிளாண்டில் இரு மாடல்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள வின்பாஸ்ட் விஎப் 6 மற்றும் விஎப் 7 ஆகிய வகை கார்கள் விற்பனை இம்மாத இறுதி முதல் தொடங்கப்படும் என வின்பாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்கள் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் 31ம் தேதி வின்பாஸ்ட் நிறுவன கார்களின் முதல் விற்பனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

error: Content is protected !!