Skip to content

SIR பணியை பொறுத்தவரை பாதி கிணறு தாண்டியுள்ளோம்- முதல்வர்

 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் இயந்திரத்தை முழு வேகத்தில் இயக்கும் வகையில், முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை காணொலி வழியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இருந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முக்கிய நோக்கமே “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற திட்டத்தை தீவிரப்படுத்துவதும், தொகுதி வாரியான தற்போதைய நிலவரங்களை ஆய்வு செய்வதும்தான்.முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும் நாம் இன்னும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். SIR பணிகளில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்திருந்தாலும், இன்னும் பாதி கிணற்றையே தாண்டியிருக்கிறோம். இனி வரும் நாட்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றுவதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தங்கள் தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிசெய்தல், போலி வாக்காளர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை, இளைஞர் அணி, மகளிர் அணி செயல்பாடுகள், சிறுபான்மையினர் வாக்கு வங்கி பலப்படுத்தல் உள்ளிட்டவை விரிவாக விவாதிக்கப்பட்டன. “எதிரணியினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் களப்பணியில் இறங்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

கடந்த முறை போலவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக முகாம்கள் அமைத்து, தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்தக் கூட்டம் திமுகவின் 2026 தேர்தல் உத்தியை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான முதல் பெரிய அடியாகக் கருதப்படுகிறது. பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து களத்தில் இறங்கி வரும் நிலையில், திமுகவும் தனது அடிமட்ட அமைப்பை முழுவதுமாகத் தயார்படுத்தி வருகிறது. “நாம் ஒன்றுபட்டு, ஒருமுகமாகச் செயல்பட்டால் 2026-லும் திமுக ஆட்சிதான்” என்ற நம்பிக்கையை முதல்வர் ஸ்டாலின் மாவட்ட நிர்வாகிகளிடம் ஊட்டினார்

error: Content is protected !!