கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செங்கோட்டையன் இரண்டு நாட்களுக்கு முன்பு யார் முதல்வர் ஆவார் என்று சொன்னார். இப்போது யார் முதல்வர் ஆவார் என்று சொல்கிறார். அது அவருடைய கருத்து. அதிகமாக அது குறித்து பேச வேண்டியதில்லை. யார் எங்கு சென்றாலும் அதுகுறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அது அவர்களுக்குள் இருக்கக்கூடிய சிக்கல். நாங்கள் மக்களை சந்தித்து அரசினுடைய திட்டங்களை அவர்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறோம்.
2026 தேர்தலில் மீண்டும் முதல்வர் அரியணையில் அமரப்போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் வெண்ணைமலை கோயில் சம்பந்தமான தவறான தகவல்களை நீதி மன்றத்தில் அதிமுகவினர் கொடுத்ததால்தான் தற்பொழுது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கட்சிகள் மற்றும் சில இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மக்களை குழப்பும் அளவிற்கு கருத்துக்களை சொல்லி வருவது ஒரு தவறான முன்னுதாரணம். 2018-ல் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 2019 இல் தீர்ப்பு வந்தபோது, அப்பொழுது அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அவர்களை வழிநடத்துபவர்கள். ஒரு சில தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் நீதிமன்றம் இது போன்ற உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு காரணம் அந்த அதிகாரிகள் கொடுத்த தவறான தகவல்கள்தான். அதனை களைவதற்கான பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே அங்கு அரசு மற்றும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியது. ஆனால், அரசை பொருத்தவரை அப்பகுதி மக்களுக்கு முழு அரணாக பாதுகாப்பாக அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது.
அப்பகுதி மக்களுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மக்களின் உணர்வை உணர்ந்து அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், அரசுத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் சந்தித்து பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கத்தின் சார்பில் பட்டா வழங்கப்பட்ட 363 ஏக்கர் உள்ளது. கோயில் பெயரில் உள்ள இடங்களும் உள்ளது. இரண்டு பேர்களில் உள்ளது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் அவர்கள் 5 பிரிவாக பிரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் தற்பொழுது நீதிமன்றத்தில் தீர்வு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே மக்களிடையே எந்தவித சந்தேகமும் தேவையில்லை, குழப்பமும் அடைய வேண்டாம். அப்பகுதி மக்களிடம் செல்லக்கூடியவர்களும் அவர்களுக்கு ஒரு தவறான தகவல்களையும், வழிகாட்டுதலையும் வழங்க வேண்டாம், பரப்ப வேண்டாம். இவ்வளவு நாள் அப்பகுதி மக்களை சென்று பார்க்காதவர்கள் தற்பொழுது சென்று பார்க்கிறார்கள், யாரு முடிச்சு போட்டார்களோ அவர்களே அவுக்குறோம் என்று சொல்வது நியாயமில்லாத செயல். எந்த ஆட்சிக் காலத்தில் தவறு நடந்தது? யார் தவறு செய்தார்? யார் தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்? இப்பொழுது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்து தருகிறோம் என்பது நகைச்சுவையா இருக்கிறது. கடந்த ஆட்சியில் அவர்கள் செய்த தவறை இன்று நாங்கள் சரி செய்து கொண்டிருக்கிறோம்” எனக் கூறினார்.

