திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கோமுட்டியூர் கூட்டுச்சாலையில் அரசனப்பள்ளி, பாலன் வட்டம், வண்டிக்கார வட்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பச்சூர் – டோல்கேட் செல்லும் சாலையில் அமர்ந்து எங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி வேண்டும் என்று அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி பேருந்துகள், லாரிகளை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற நாட்றம்பள்ளி போலீசார் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உங்களுக்கு உரிய ஏற்பாடு செய்து தரப்படும் என்று கூறி அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் குப்பம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்களது நிலம் அனைத்தும் ரயில்வே தண்டவாளத்தை தாண்டி உள்ளது ஆனால் ரயில்வே நிர்வாகம் தண்டவாளம் இருக்கும் பகுதியில் தடுப்பு அமைத்து விட்டனர். எனவே எங்களால் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் இதற்கு மேலும் அரசாங்கம் எங்களுக்கு சாலை வசதி செய்ய தரவில்லை என்றால் மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆதங்கம் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுக்கு சாலை வசதி தான் வேண்டும்- அப்பகுதி மக்கள் சாலை மறியல்
- by Authour

