டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக, அமலாக்கத்துறை ரெய்டுக்கு அஞ்சியே 3 ஆண்டுகளாக புறக்கணித்து வந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க டெல்லி சென்றதாக இபிஎஸ், சீமான் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், ‘ஈடி அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். மிரட்டி அடிபணிந்து பயப்படுவதற்கு அடிமைக் கட்சி கிடையாது’ என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இன்று தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து விவாதிக்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இது ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பேசிய உதயநிதி, ”EDக்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். தப்பு செய்கிறவர்களே பயப்பட வேண்டும், நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் மடியில் கனம் இல்லை என்பதால் எந்த சோதனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும்” கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தொடர்ந்து மாநில உரிமைக்காக குரல் கொடுப்போம், எங்களை மிரட்ட பார்க்கிறார்கள், யாருக்கும் திமுக அடி பணியாது. மக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா கேட்டு வருவோரை அலைக்கழிக்காமல் உடனே தீர்வு காண வேண்டும். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.