கடந்த சில நாட்களாகவே ரோபோ சங்கர் உடல்நல பிரச்சனையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வந்தார். முக்கியமாக அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்திருப்பது திரைத்துறையினர் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் காமாலை வந்தால் மரணம் நிச்சயமா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து மருத்துவர்கள் சிலர் விளக்கம் அளித்து இருக்கின்றனர். மஞ்சள் காமாலை என்பது நோய் கிடையாது அது ஒரு நோயின் அறிகுறி. இந்த பாதிப்பு ஏற்கெனவே ரோபோ சங்கருக்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது உடலில் ‘பிலிருபின்’ என்கிற கழிவு வெளியேற்றப்படும். இது ஒரு சாதாரண கழிவு பொருள்தான். உடலில் உள்ள பழைய ரத்த சிவப்பு அணுக்கள் சிதையும் போது அவற்றிலிருந்து வெளியேறும் ஹீமோகுளோபின் என்ற நிறமி பொருள் உடைந்து பிலிருபினாக மாறும். இது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு மனிதர்களின் உடலிலும் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். இந்த அணுக்களின் சராசரி ஆயுட்காலம் 120 நாட்கள்தான். இந்த அணுக்கள் பழையதாகும் போது அவை மண்ணீரல், கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையில் உள்ள மேக்ரோபேஜ்களால் உடைக்கப்படுகின்றன. இவ்வாறு உடைக்கப்பட்ட அணுக்கள் அனைத்தும் அதில் உள்ள ஹீமோகுளோபினால் பிலிருபினாக மாற்றப்படுகிறது.
இந்த கழிவு பொருள் கல்லீரலுக்கு அனுப்பப்பட்டு அங்கு ஒரு ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. அங்கிருந்து பித்த நீருடன் கலந்து நம்முடைய குடலுக்கு செல்கிறது. இறுதியாக குடலில் இருந்து மலம் வழியாகவோ அல்லது சிறுநீர் மூலமாவோ வெளியேற்றப்படுகிறது. இதனால் தான் சில நேரங்களில் சிறுநீர் மஞ்சள் நிறத்திலும் மலம் பழுப்பு நிறத்திலும் இருக்கிறது. பொதுவாக இந்த கழிவு பொருள் முழுவதுமாக உடலில் இருந்து வெளியேற்றப்படுவதில்லை. நம்முடைய ரத்தத்தில் குறிப்பிட்ட அளவுக்கு இது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இது குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கும் வரை நமக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் குறிப்பிட்ட அளவை தாண்டும் போது அதுவே மஞ்சள் காமாலையாக மாறுகிறது.
மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு தோல், கண்கள் மற்றும் உடலின் சில பகுதிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதற்கு ‘பிலிருபின்’ கழிவு பொருள் தான் காரணம். மூன்று காரணங்களுக்காக உடலில் இந்த கழிவு பொருள் வெளியேற்றப்படாமல் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. ஒன்று கல்லீரல் நோய், இரண்டாவது பித்த நீர் அடைப்பு, மூன்றாவது ரத்த சிவப்பணுக்கள் அதிக அளவில் சிதைவது. இதில் ரோபோ சங்கரை பாதித்தது கல்லீரல் நோய்தான். கல்லீரல் பாதிப்படையும்போது கல்லீர் நோய் ஏற்படுகிறது. இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. பொதுவான காரணம் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ போன்ற வைரஸ்களால் ஏற்படும் தொற்றுதான். இதில் பி மற்றும் சி வைரஸ்கள் நாள்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி கல்லீரலை கடுமையாக பாதிக்கும். அதேபோல உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பானது தவறுதலாக கல்லீரல் செல்களை தாக்கும் போதும் கல்லீரல் பாதிப்படுகிறது. இன்னொரு காரணம் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளாகும்.
ஆனால், இது தவிர நான்காவது முக்கியமான காரணம் இருக்கிறது அது மது அருந்துதல்தான். அதிகப்படியாக மது அருந்துதல் மூலம் ‘ஆல்கஹால் ஹெபடைட்டீஸ்’ என்ற நிலை ஏற்பட்டு கல்லீரல் முற்றிலுமாக பாதிப்படைந்து இறுதியில் மரணம் ஏற்படுகிறது. உடலில் எந்த பொருள் சென்றாலும் அது நம்முடைய கல்லீரலில் தாண்டி போக முடியாது. அதாவது வயிற்றுக்குள் போகும் எதுவும் கல்லீரலின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. மதுவும் அப்படித்தான். அதிகப்படியாக மது அருந்தும் போது ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்தால் உருவாக்கும் நச்சுப் பொருட்கள் கல்லீரல் செல்களை பாதிக்கின்றன. இந்த நச்சு கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும். இதைத்தான் ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ் என்று சொல்கிறார்கள். இந்த நோயின் அறிகுறிதான் மஞ்சள் காமாலை. வயிற்று வலி, வீக்கம் களைப்பு, பலவீனம், பசியின்மை, எடையை குறைதல், லேசான காய்ச்சல் ஆகியவையும் இதன் அறிகுறிகள்தான். கல்லீரல் பாதிக்கப்பட்டால் அந்த பாதிப்புகளை மூன்று வகைகளாக பிரிப்பார்கள்.
ஒன்று 1. தொடக்கநிலை 2. இடைநிலை 3. இறுதிநிலை
கல்லீரல் பாதிப்பு தொடக்க நிலையில் உங்களுக்கு அறிகுறி தெரியும்போதே உடனடியாக மது அருந்துவதை அன்றைய நாளில், அன்றைய நிமிடத்திலிருந்து நிறுத்தத் தொடங்கினால் கூட கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பானது கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கி விடும். இரண்டாவது நிலையில், பாதிப்புகளின் அறிகுறிகள் அதிக அளவில் தெரியும். மருத்துவ பரிசோதனையில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படும். அப்போதும் கூட உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதாவது இந்த பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் மது அருந்துவதை நிறுத்துவது, அதேபோல மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது மற்றும் உணவில் கவனம் செலுத்துவது இவை அனைத்தும் நிச்சயம் உங்கள் உயிரை காப்பாற்றும்.
ஆனால் இறுதி கட்டத்தில் வரும் பொழுது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்து போயிருக்கும். இந்த கட்டத்தில் உடனடியாக மது அருந்துவதை நிறுத்தினாலும் கூட எந்த மாற்றமும் ஏற்படாது. உணவுகள் மருந்துகள் இதன் மூலம் கூட எந்த மாற்றமும் தெரியாது. ரோபோ சங்கர் உயிரிழந்தது எப்படி? இதற்கு ஒரே ஒரு தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான். ஆனால் அது லேசுபட்ட காரியம் கிடையாது. ரத்த சொந்தத்தில்தான் கல்லீரலை பெற்று அதை மாற்றி வைக்க முடியும். குழந்தைகள் எனில், பெற்றோர்கள் கல்லீரலை கொடுக்க முன்வருவார்கள். ஆனால், வயதானவர்களுக்கு கல்லீரலை தானமாக கொடுக்க யாரும் பெரிய அளவில் முன்வர மாட்டார்கள். இதில் உள்ள இரண்டாவது சிக்கல், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னரும் கூட உடல்நிலை கவனமாக பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ரோபோ சங்கருக்கு கல்லீரல் முழுவதுமாக செயலிழந்ததுதான் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது கல்லீரல் செயலிழந்துவிட்டால் நோய்தொற்று அதிகமாவது, உடல் உருப்புக்களில் நீர் அதிகம் சேர்வது போன்றவை மூலம் கூட மரணம் ஏற்படும். எனவேதான் இந்த பிரச்சனை மிகுந்த ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.