வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர்.
இன்று காலை தொடங்கிய நிதி ஆயோக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசியிருக்கிறார். அவரது கோரிக்கைகளில், ”ஒருதலைப்பட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல் SSA திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும்.
PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடாததால் நிதியை நிறுத்தி வைத்ததை சுட்டிக் காட்டி வலியுறுத்தினார். மத்திய அரசின் வரி வருவாயில், 50%-ஐ மாநிலங்களுக்கு வழங்க வேண்டும், மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41% வரிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை.
தற்போது 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது. கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை போல தமிழ்நாட்டில் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை தூய்மைப்படுத்தும் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த திட்டங்களுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.