IPL 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று துபாயில் தொடங்க உள்ளது. 350 வீரர்களை உள்ளடக்கிய இந்த ஏலத்தில் 240 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக ரூ.64 கோடி பட்ஜெட் உடன் பங்கேற்கிறது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணி குறைந்தபட்சமாக ரூ.2.75 கோடி உடன் ஏலத்தில் இறங்குகிறது. இந்த ஏலம் IPL அணிகளின் அடுத்த சீசன் உத்தியை தீர்மானிக்கும் முக்கியமானது, பல வீரர்கள் பெரிய விலைக்கு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஏலம் வெளிநாட்டில் நடப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. “IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? இந்தியாவில் அரங்கங்கள் இல்லையா? இதே செயலை வேறு யாராவது செய்திருந்தால் உடனே ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்திவிடுவார்கள்” என்று கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. BCCI-யின் இந்த முடிவு திட்டமிட்டது என்றும், இந்தியாவின் உள்கட்டமைப்பை பயன்படுத்தாமல் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது ஏன் என்றும் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே, “ஏன் IPL ஏலங்கள் இந்தியாவிற்குப் பதிலாக அபுதாபியில் நடத்தப்படுகின்றன? அதற்கான கட்டாயம் என்ன? இங்கு மைதானங்கள் இல்லாததா அல்லது இது ஒரு திட்டமிட்ட முடிவா? IPL ஒரு ‘தேசியப் பெருமைக்குரிய’ பிராண்ட் என்றால், முக்கியத்துவம் வாய்ந்த, பணம் ஈட்டித் தரும் ஒரு நிகழ்வை மீண்டும் மீண்டும் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?
நிச்சயமாக, வேறு யாராவது இதைச் செய்திருந்தால், அவர்கள் உடனடியாக ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள். ஆனால், BCCI எது செய்தாலும் அது ஒரு விஸ்கித்பாரத்-க்காக என்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விமர்சனங்கள் IPL-ன் நிர்வாகம் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. BCCI இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை. ஏலம் துபாயில் நடப்பது தொழில்முறை ஏற்பாடுகள், சர்வதேச ரசிகர்கள் ஈடுபாடு ஆகியவற்றுக்காக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். 2026 IPL சீசன் தொடங்குவதற்கு முன்னதாக இத்தகைய விவாதங்கள் தீவிரம் அடையலாம்.

