உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மூன்றே மாதங்களில் கணவரை கொலை செய்த மனைவியையும் அவருக்கு உதவிய பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் (33) மற்றும் ஜோதி ஆகியோர் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜிதேந்திர குமாருக்கு ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோதியின் வங்கிக் கணக்கில் இருந்த 20,000 ரூபாயை எடுத்து அவர் சூதாட்டத்தில் இழந்ததால் தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்துத் தகவலறிந்த ஜோதியின் பெற்றோர் மற்றும் சகோதரர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த ஜோதி, அவரது தந்தை காளிசரண், தாய் சமேலி மற்றும் சகோதரர் தீபக் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ஜிதேந்திர குமாரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைக்க உடலைத் தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர்.
முதலில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஜோதி மற்றும் அவரது பெற்றோர் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஜோதியின் சகோதரர் தீபக்கைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

