Skip to content

கத்திமுனையில் செயின் பறிக்க முயற்சி-கையை கடித்து தப்பிய பெண்

தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் சிவகமலா (45). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சிவகமலா வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிவகமலா கூச்ச லிட முயன்றார். ஆனால் உஷாரான மர்ம ஆசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை சிவகமலாவின் கழுத்தில் வைத்து மிரட்டி, அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால், பதற்றமடைந்த சிவகமலா தப்பிப்பதற்காக மர்ம ஆசாமியின் விரலை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மர்ம ஆசாமி வலி தாங்க முடியாமல் அங்கிருந்து நகையுடன் தப்பி ஓடியோடியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமி குறித்து அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அங்கு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் கைவிரலில் காயத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்த மர்ம ஆசாமியை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. போலீசாரிடம் சிக்கிய நபர் தேவிபட்டினத்தை சேர்ந்த பசுபதி மகன் சசிக்குமார் (30) ஆவார். கூலித் தொழிலாலியான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தூத்துக்குடி டி.எம்.பி.காலனியில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து கட்டிடத்தில் காங்கிரீட் போடும் வேலைக்கு சென்று வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் வேலை இல்லாததால், பண தேவைக்காக கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள வீடுகளை குறி வைத்து திருட திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதியில் உள்ள சிவகமலா வீட்டுக்குள் புகுந்து நகையை பறித்து சென்று இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சசிக்குமார் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்து 7 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர்.

error: Content is protected !!