Skip to content

6 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (33). கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வரும் இவருக்கும், காவ்யா (20) என்பவருக்கும் காதலித்து திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சமீரா என்ற 6 மாத கைக்குழந்தை இருந்தது.

சிவபாலனின் தாய் செந்தமிழ்செல்வி (52) அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாகவும், தந்தை பழனித்துரை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காவ்யாவைக் காதலித்து திருமணம் செய்த காரணத்தினால் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனையைத் தவிர்க்க, சிவபாலன் தனது மனைவி மற்றும் குழந்தையை அருகில் உள்ள காவ்யாவின் தாய் வீட்டில் தங்க வைத்திருந்தார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த காவ்யா, நேற்றிரவு தனது 6 மாத குழந்தையுடன் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் வெளியிட்ட உருக்கமான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பதிவில் காவ்யா பேசியிருப்பதாவது:

“எனது கணவர் சிவபாலன் மிகவும் நல்ல மனிதர். ஆனால், எனது மாமியார் செந்தமிழ்செல்வியும், மாமனார் பழனித்துரையும் என்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். என்னால் இதற்கு மேல் தாங்க முடியவில்லை. எனது குழந்தையை மட்டும் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாததால், அவளையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.”

சமூக வலைதளப் பதிவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விரைந்து வந்து தேடியபோது, கிணற்றில் இருந்து காவ்யா மற்றும் குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த வேதாரண்யம் போலீசார், தற்கொலைக்குத் தூண்டியதாக மாமியார் செந்தமிழ்செல்வியைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாமனார் பழனித்துரையை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!