தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் தனது கணவருடன் வந்து ஆட்சியர் கமல் கிஷோரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், புளியங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் தனக்குத் தொடர்ந்து ஆபாச வீடியோக்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு புகார் அளிக்கச் சென்ற தனது கணவரின் செல்போனைப் பறித்து வைத்துக்கொண்ட அந்தப் போலீஸ்காரர், அதிலிருந்து தனது எண்ணைக் கண்டறிந்து 29-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீடித்த தொல்லைகளால், அவரது கணவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரைப் பெற மறுத்த போலீசார், அவரது கணவரை மிரட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து கடந்த 11.12.2025 அன்றும் அந்த போலீஸ்காரர் தனது எண்ணிற்கு மீண்டும் ஆபாச வீடியோக்களை அனுப்பியதாகவும், அதற்கான ‘ஸ்கிரீன் ஷாட்’ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுக்குப் பதிவுத் தபால் மூலம் புகார் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், தற்போது ஆட்சியரிடம் முறையிட்டுள்ளதாக அவர் கூறினார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் கமல் கிஷோர், இது குறித்து உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

