தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவருடைய மனைவி சுகந்திபாய் (57) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சுகந்திபாய் தனது குடும்பத்தினருடன் கடந்த 17-ந்தேதி சென்னையில் இருந்து ஈரோடு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வந்தார். அப்போது, பொம்மிடி ரெயில் நிலையத்தில் அவர் இறங்கி முதலாவது நடைமேடையில் சென்று கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை வாலிபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பிஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகந்திபாய் மற்றும் அவரது குடும்பத்தினர் இது தொடர்பாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரித்தனர். அதில், அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் தாத்தியம்பட்டியை சேர்ந்த திவாகர் (28), இவர் பொறியியல் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. பொம்மிடி ரெயில் நிலையத்தில் சுகந்தியிடம் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அவர் தான் திருடிய 8 பவுன் நகைகளை உருக்கிவிட்டதாக தெரிவித்தார். பின்னர் அந்த நகைகளை போலீசார் மீட்டனர்.
இதேபோல், கடந்த ஜூலை மாதம் சேலத்தில் இருந்து விருதாச்சலம் சென்ற பயணிகள் ரெயிலில் ஏறி சிறுவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டபோது ஒரு பெண்ணிடம் 2 பவுன் நகைகளை திருடியதும், கடந்த மாதம் பொம்மிடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருடப்பட்ட 10 பவுன் நகைகள் மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் மீட்டனர்.