ஒடிசா மாநிலம் ராயகண்டா மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயகண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், நேற்று மதியம் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அந்தச் சிறுமியை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் வைத்து கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. வீட்டிற்குத் திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பிடிபட்டவர்களின் பெயர் மற்றும் விவரங்களை போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

