திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பாரத் அம்பேத்கார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு குடி போதையில் வந்த தலைமை ஆசிரியர் 5 ஆம் வகுப்பு மாணவியை தன் மடியில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பார்த்த கிராமமக்கள் வீடியோ காட்சி பதிவு செய்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். புகாரின் பேரில் மாதனூர் வட்டார கல்வி அலுவலர்கள் பீட்டர் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது பொதுமக்கள் சிலர் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகளை காண்பித்துள்ளனர். இதனை அறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்கள் தங்களுடைய செல்போன்களில் பதிவு செய்திருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அழித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே பேரணாம்பட்டு ஒன்றியம் அரவட்லா, மாதனூர் ஒன்றியம் காட்டு வெங்கடாபுரம், சம்பந்திகுப்பம் அடுத்த பள்ளவல்லி, ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் பணிபுரிந்த நேரத்தில் இதே போன்ற தவறு செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மீண்டும் பணி அமர்தப்பத்துள்ளார்.
இதற்கு இடையில் தற்போது மேல் சானாங்குப்பம் பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உமராபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது! செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர் என்பவரை பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆம்பூர் அருகே தொடக்க பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலில் சீண்டலில் ஈடுபட்டு போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது! செய்யப்பட்ட நிலையில் பணியிட நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.