2024-25ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், முதலமைச்சர் அறிவுரைக்கிணங்க, முதல் முறையாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஹஜ் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால், 14 கோடியே 12 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,000/- வீதம் 5,650 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 10 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25,000 க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர். சா. விஜயராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது, ஹஜ் பயணம் செய்யும் ஒரு பயணிக்கு 25 ஆயிரம் என்ற அடிப்படையில் மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளதாகவும். இந்தாண்டு 5700 பேருக்கு இந்த மானியம் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும், நெல்லையில் அமைய உள்ள நூலகத்திற்கு கண்ணியமிகு காயிதே மில்லத் பெயர் வைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி என்று தெரிவித்தார். தமிழுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை கண்ணியப்படுத்தும் வகையில் அவரது பெயரை நூலகத்திற்கு வைத்துள்ள முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
